ஆஸ்கர் விழா எப்போதும் போலவே இனிமையாக முடிந்தாலும், இந்தாண்டு ஒரு ‘அறை’ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெறுவது இதுவே முதல்முறையாகும். விழாவை கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டைத் தலை குறித்துக் கேலியாக கிறிஸ் ராக் பேசினார். அப்போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த வில் ஸ்மித், நேராக மேடைக்கு ஏறினார். கிறிஸ் ராக்கிடம் நெருங்கிப் போய் அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுத்து, மீண்டும் கீழே இறங்கிவந்தார். இதனை எதிர்பார்க்காத ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ச்சியடைந்தது. இதையடுத்து, கீழே இறங்கி வந்து, இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித், தனது மனைவியைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம் என்று கத்தினார். இந்தக் காட்சி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு வில் ஸ்மித்திற்கு எதிராக “ஒழுங்கு விசாரணை” தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த சம்பவத்துக்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல், ஆஸ்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுப் பெற்றவர்கள், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள், விருந்தினர் மற்றும் பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ’ஜெய்பீம்’ கானல்நீரான ஆஸ்கர் கனவு – ரசிகர்கள் ஏமாற்றம்
ஆஸ்கர் அகாடமிக்கு தனது தரப்பு விளக்கத்தை வில் ஸ்மித் அளித்துள்ளார். அதில், ‘எனது மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் கிறிஸ் ராக்கை அறைந்தேன்’ என்று கூறியுள்ளார்.
இதுபோதாதென்று, பொதுவெளியிலும் வில் ஸ்மித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது ; மன்னிக்க முடியாதது. என்னை பற்றிய ஜோக்குகள் என் பணியின் ஒரு பகுதிதான் ; ஆனால் எனது மனைவி ஜடாவின் மருத்துவ ரீதியிலான பிரச்சனை பற்றிக் கிண்டலாகக் குறிப்பிட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. நான் உணர்ச்சி வசப்பட்டு அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளேன். இதற்காக, பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.
மேலும் படிக்க | மனைவியை கேலி செய்தவரை அறைந்த வில் ஸ்மித்…மவுனம் கலைத்த வில் ஸ்மித் மனைவி
அகாடமியிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்வின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், உலகம் முழுக்க பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அற்புதமான ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டிய அந்த விழா, என்னால் கறை படிந்ததற்காக ஆழமாக வருந்துகிறேன். என்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்ததில் இருந்து இன்னும் வில் ஸ்மித் மீது புகார் எதுவும் கிறிஸ் ராக் அளிக்கவில்லை. அமெரிக்காவில் இதுமாதிரியான நடத்தைகளுக்கு புகார் அளித்தால் 6 மாத காலம் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வில் ஸ்மித்தின் பொது அறிக்கைக்குப் பிறகு கிறிஸ் ராக் பதில் அளித்துள்ளார். அதில், ‘ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் அறைந்த சம்பவத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்த விவகாரம் குறித்து விரைவில் பேசுவேன். அது தீவிரமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு உண்மையானால் உலக வரைபடமே 2022இல் மாறும்