கடந்த 1990-களில் காஷ்மீரை விட்டு பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது.
இந்த படத்துக்கு பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்லியிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மாநில சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பா.ஜனதா இளைஞர் அணியினர் நேற்று கெஜ்ரிவால் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் தடுப்புகளை மீறி கெஜ்ரிவால் வீட்டு முன்பு கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இரும்பு கதவு மீது பெயிண்ட் வீசிய அவர்கள் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
கெஜ்ரிவால் வீடு மீது சமூக விரோத சக்திகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது திட்டமிட்ட சதியாகும். கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை கொல்ல முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதற்கிடையே கெஜ்ரிவால் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பா.ஜனதா இளைஞர் அணியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.