பெங்களூரு: பெங்களூருவில் ஹலால் மாமிசத்தை இந்து மதத்தினர் வாங்க வேண்டாம் என்று பஜ்ரங் தள் அமைப்பினர் துண்டு பிரச்சுரம் விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களால் விற்பனை செய்யப்படும் ஹலால் மாமிசத்தை வாங்க வேண்டாம் என்று இந்து அமைப்புகள் சமீப காலமாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக பெங்களூருவில் நிலமங்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஹலால் மாமிசத்தை தவிர்ப்போம் என்று துண்டு பிரச்சுரங்களை விநியோகித்தனர். இந்து கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வணிகம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில் உடுப்பி பேஜாவர் மடத்தின் தலைமை குருவை இஸ்லாமிய மத தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். அதில், இந்துத்துவ அமைப்பினரின் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனை ஓய்வதற்குள் ஹலால் மாமிசம் தொடர்பாக அடுத்த சர்ச்சை உருவாகியுள்ளது.