புதுடெல்லி: ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் காரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் காரில் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அமைச்சர்நிதின் கட்கரி நேற்று வந்தார். இந்தக் கார்சுற்றுச் சூழல் மாசை ஏற்படுத்தாது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 845 கி.மீ. தூரம் செல்ல முடியும்.
பின்னர், செய்தியாளர்களிடம் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘எரிபொருளில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும். அதற்காகத்தான், தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளோம். மாதிரி அடிப்படையில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பசுமை ஹைட்ரஜன் கார் உற்பத்தி தொடங்கும். இந்தியாவில் இந்தக் கார் உற்பத்தி செய்யப்படுவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கும் ஹைட்ரஜன் ஏற்றுமதி செய்யப்படும்’’ என்றார்.