டெல்லி : மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பெருகி வரும் போதிலும் 2020ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 35% குறைவாக வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு தக்க நேரத்தில் கை கொடுத்த திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், ஆனால் அந்த திட்டத்திற்கான நிதி படிப்படியாக குறைக்கப்படுவதாக சோனியா காந்தி வேதனை தெரிவித்தார். நிதி குறைப்பால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது தாமதம் ஆகுவதால், இந்த திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டத்தை நீர்த்து போகச் செய்திடாமல் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தி உள்ளார்.