புதுடெல்லி: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 15 நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் நேற்று பேசிய காங். தலைவர் சோனியா காந்தி, ‘நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெருகி வரும் போதிலும் 2020ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 35% குறைவாக வேலைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்கான நிதி படிப்படியாக குறைக்கப்படுகிறது. இதனால் ஊதியம் வழங்கப்படுவது தாமதம் ஆவதால், இந்த திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் பதிலளித்து பேசுகையில், ‘இதனை அரசியலாக்க சோனியா முயல்கிறார். அவருடைய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. ஐமுகூ ஆட்சியின்போது, இந்த திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டது. மோடி ஆட்சியில் ரூ.1.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.