பொதுவாகவே வீட்டில் பிரச்னை ஏற்படும் போது சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு திரும்புவதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் திரும்ப வராமல் வேறு ஏதேனும் ஊருக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்றுவிடுவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் வீட்டாரின் மீது கோபித்துக்கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் தங்கிவருவது அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
சீனாவைச் சேர்ந்த வெய் ஜியாங்குவோ என்பவர் தன்னுடைய 40-வது வயதில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு அரசின் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், திடீரென வீட்டை விட்டு வெளியேறிய வெய் ஜியாங்குவோ வீட்டுக்குத் திரும்பவே இல்லை.
அவர் பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையத்துக்குள் உலா வந்துள்ளார். சீன காவல்துறை மற்றும் பாதுகாப்பு காவலர்கள் அவரை அழைத்துச் சென்று அவரின் இல்லத்தில் விட்டாலும், திரும்பவும் அவர் விமானநிலையத்துக்கு வந்துவிடுகிறார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது “வீட்டில் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது எனத் தடை போடுகிறார்கள். என்னால் புகை பிடிக்காமல் மது அருந்தாமல் இருக்க முடியாது.
மேலும், அரசு வழங்கும் உதவித் தொகையை வீட்டாருக்கு வழங்க வேண்டும். இவற்றை எல்லாம் தவிர்க்கவே இங்கு வந்துவிட்டேன்” எனத் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இவர் 2008 முதல் 14 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். ஆனால் விமான நிலையத்தில் தன் வாழ்நாளைக் கழிப்பவர்களில் இவருக்கு முன்னோடியாக 1991 முதல் 2019 வரை இஸ்தான்புல்லில் உள்ள அட்டதுர்க் விமான நிலையத்தில் ‘பயராம் டெபெலி’ என்பவர் 27 ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.