அன்று "ஓ"..ன்னு அழுத ரூபா.. ஜில்லுன்னு பாடி.. "மெளனமே பார்வையால்".. சிலிர்க்க வைத்த சிவா!

டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் நேற்று முழுவதும் ஒரே பாட்டுக் கச்சேரிதான்.. மெல்லிசையும், துள்ளல் இசையும், இன்னிசையுமாக கலக்கி விட்டார்கள்… திடீர் பாடகர்களாக அவதாரம் எடுத்த எம்.பிக்கள்.

சுடச் சுட விவாதங்கள்.. சூடான கோஷங்கள்.. கோபங்கள், பேப்பர் கிழிப்புகள்.. கோபாவேசப் பேச்சுக்கள்.. வெளிநடப்புகள் என எப்போதும் ஹாட்டாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.. திடீரென மைக்கைப் பிடித்து.. “காற்றில்.. எந்தன் கீதம்” ரேஞ்சுக்கு பாட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் குதூகலமாக காணப்பட்டது துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவின் வீடு.

72 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து அவர்கள் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து பிரிவுபசார விழாவுக்கு
வெங்கய்யா நாயுடு
ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் 72 எம்.பிக்களும் கலந்து கொண்டனர். இந்த பிரிவுபசார விழாவின்போது பல எம்பிக்கள் பாட ஆர்வம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆர்கெஸ்ட்ராவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டு வளாகத்தில் போடப்பட்டிருந்த மேடையில் ஏறி எம்.பிக்கள் பாட ஆரம்பித்தனர். சூடாக பேசக் கூடியவர்கள் இப்படி கூலாக பாடுகிறார்களே என்று மேடைக்குக் கீழ் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டு இதை ரசித்தனர். சரத் பவார் எல்லாம் தாளம் போட்டு ரசிக்க ஆரம்பித்து விட்டார். அந்த அளவுக்கு சில எம்.பிக்களின் பாடல் சூப்பராக இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பான கெஜ்ரிவாலின் பேச்சு குறித்து ராஜ்யசபாவில் படு ஆவேசமாக பேசி அழுத ரூபா கங்குலி (மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்தவர்) மேடையில் ஏறி மைக்கைப் பிடித்ததும் ஜில்லென பாட ஆரம்பித்து விட்டார். உருகி உருகி அவர் பாட.. நம்ம ரூபாவா இது என்று ஆச்சரியப்பட்டு உச்சுக் கொட்டி அனைவரும் ரசித்தனர்.

இதெல்லாம் என்ன பாட்டு.. இப்ப நான் பாடுறேன் பாருங்க சூப்பர் பாட்டு என்று மேடையேறினார் அந்த “தாடி வைத்த பாடகர்”.. யாரு இது ஜேசுதாஸான்னு பார்த்தா நம்ம
திருச்சி சிவா
.. ஆஹா.. இவர் பாட வேறு செய்வாரா என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு வாயை மூடுவதற்குள்.. “மெளனமே பார்வையால்” என்ற பாட்டை மெல்ல பாட ஆரம்பித்து மூடிய வாய்களை திறக்க வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். சும்மா சொல்லக் கூடாது.. பிபி ஸ்ரீனிவாஸே நேரில் வந்து பாடியது போல அவ்வளவு மென்மை.. நல்லாத்தான் இருந்துச்சு பாட்டும்.

ஆனால் அதை விட ஹைலைட் என்னவென்றால் எம்.பிக்கள் கூட்டமாக கூடி ஒரு இந்திப் பாட்டைப் பாடியபோது அவர்களுடன் சேர்ந்து திருச்சி சிவாவும் அந்தப் பாட்டைப் பாடினார் என்பதுதான்.

இப்படியாக ஒவ்வொரு எம்பியும் பாடப் பாட அந்த இடமே ரம்யமாக மாறிப் போய் விட்டது. “கரண்ட்” எம்.பிக்கள் எல்லாம் இப்படி ஜாலியாக பாடி மகிழ்வித்த நிலையில், ஓய்வு பெற்ற எம்.பிக்களுக்குத்தான்.. “குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே.. குயில்களைப் போல இரவும் பகலும் கூடித் திரிந்தோமே” என்ற பசுமையான பழைய நினைவுகள் எல்லாம் வந்து கலந்து கண்கள் பனிக்க நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அடுத்த செய்திபெற்றோர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன சூப்பர் அட்வைஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.