நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் இனியும் தாமதம் செய்வது அவர் வகிக்கும் பதவிக்கும், அவருக்கும் பெருமை சேர்க்காது என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
நீட் விலக்கு சட்டமுன்வடிவை அனுப்பி வைப்பதில், ஆளுநர் காட்டும் தாமதம் துளியும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்து கொண்டவர்களை மனதில் வைத்து ஆளுநர் விரைந்து முடிவெடுத்தாக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை இதில் செலுத்தியோ அல்லது தவறான சில மனிதர்களின் வழிகாட்டுதல்படியோ ஆளுநர் தாமதிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமுன்வடிவு சரியானதா இல்லையா என அட்டர்னி ஜெனரலை வைத்து குடியரசுத் தலைவர் ஆய்வு நடத்திக் கொள்வார் என்றும், ஆனால் குடியரசுத் தலைவரின் பணியை ஆளுநர் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடந்து கொள்ளும் முறை என்பது, இன்றைய கேபினெட் சிஸ்டத்துக்கே எதிரானது என்றும், 1920ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த இரட்டையாட்சி முறை அமலில் இருப்பதைப் போல ஆளுநர்கள் செயல்படமுடியாது என்றும் முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM