ஆந்திரா: ஆந்திராவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேருக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு பள்ளிகளில் இயங்கும் கிராமம் மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற கடந்த 2020ம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை ஓராண்டாக மதிக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், அதனை செயல்படுத்ததாக 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான விஜய்குமார், ஷாமலா ராவ், சின்ன வீர பத்லடு, கோபாலகிருஷ்ண திபேதி, எம்.எம்.நாயக், குடுதி ராஜசேகர், ஸ்ரீலக்சுமி, கிரிஜா சங்கரி ஆகியோரே தண்டனைக்கு ஆளானவர்களாவர். ஆனால் அவர்கள் அனைவரும் உடனடியாக மன்னிப்பு கோரியதால் சிறை தண்டனைக்கு பதிலாக ஓராண்டுக்கு மாதந்தோறும் ஒருநாள் சமூகநலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஓராண்டுக்கு ஒருநாள் சாப்பாடு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. ஆந்திராவில் நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக கூறி இவ்வாறு தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.