டெல்லி, டால்கடோரா மைதானத்தில் நடைபெற்ற ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தேர்வில் நாம் பெற்ற அனுபவம் வாழ்வில் கைகொடுக்கும். பல்வேறு பண்டிகைகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகள் வர இருக்கின்றன. தேர்வை நாம் ஒரு பண்டிகையாகக் கொண்டாடத் தொடங்கினால், அதில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கும். மாணவர்கள் ஆன்லைனில் கற்பதை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும், ஒரு பிரச்னையாக அல்ல. தேர்வுகளின்போது மாணவர்கள் பயத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடாது. அவர்கள் சுதந்திரமாக தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய மகனுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, தங்கள் மகளுக்கும் கொடுக்க வேண்டும். தொழில்நுட்பம் ஒரு சாபம் அல்ல. அதைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். ஆன்லைனில் படிக்கும் போதே மாணவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்றார்.