புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். எங்கும் சோதனை நடத்த முடியும். ராணுவ நடவடிக்கையில் யாரேனும் உயிரிழந்தால் மத்திய அரசின் ஒப்புதலின்றி விசாரணை நடத்த முடியாது.
இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் இந்த மாநிலங்கள் கோரி வருகின்றன. இது தொடர்பாக போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று தனது ட்விட்டர் பதிவில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பிராந்தியம் தற்போது அமைதி, செழிப்பு மற்றும் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை கண்டுவரும் நேரத்தில் பிரதமரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வுக்கு நன்றி. இந்த முக்கியமான தருணத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.