'ஆர்ஆர்ஆர்' சர்ச்சைகளுக்கு ஆலியா பட் விளக்கம்
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக பாலிவுட் நடிகையான ஆலியா பட் நடித்திருந்தார். ஆனால், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமே அமைந்தது என விமர்சனங்கள் எழுந்தன. அதனால், கோபமடைந்த ஆலியா அவரது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து 'ஆர்ஆர்ஆர்' சம்பந்தப்பட்ட சில பதிவுகளை நீக்கியதாகவும், இயக்குனர் ராஜமவுலியை 'அன்பாலோ' செய்துவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இருப்பினும் அடுத்த சில நாட்களிலேயே 'ஆர்ஆர்ஆர்' படம் பாலிவுட்டில் 100 கோடி வசூலைக் கடந்தது குறித்து பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து நேற்று தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆர்ஆர்ஆர்' குழுவுடன் நான் 'அப்செட்'டில் இருப்பதால் சில பதிவுகளை நீக்கி விட்டேன் என தற்செயலாகப் பார்த்தேன். இன்ஸ்டாகிராம் பக்க அமைப்புகளில் தற்செயலாக நடக்கும் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு எதையும் யூகிக்க வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எனது பக்க அமைப்புகளில் பழைய வீடியோக்களை நான் எப்போதும் மறு சீரமைப்பேன். அவை சீராக இல்லாமல் இருப்பதை குறைக்க விரும்புவேன்.
'ஆர்ஆர்ஆர்' உலகத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையான ஒன்று. சீதாவாக விருப்பத்துடன் நடித்தேன், ராஜமவுலி சாரின் இயக்கத்தில் நடித்ததும், ராம்சரண், என்டிஆர் ஆகியோருடன் வேலை செய்ததும் பிடித்தது. இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயமும் எனக்குப் பிடித்தமான ஒன்று.
ராஜமவுலி சார் மற்றும் அவரது குழுவினர் பல வருடங்களாக இதற்கான உழைப்பு, முயற்சி ஆகியவற்றைச் செய்து ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்ததற்காகவே இந்த சர்ச்சைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். படம் பற்றிய தவறான தகவல்கள் அனுபவங்கள் ஆகியவற்றை அனுமதிக்க மறுக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.