புதுடெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், மீண்டும் அதை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். பின்னர், சட்டப்பேரவையில் மீண்டும் 2வது முறையாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இயற்றப்பட்ட தீர்மானத்தையும் தமிழக ஆளுநர் மாதக் கணக்கில் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதை ஜனாதிபதிக்கு அனுப்பும்படி, ஆளுநரை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், தற்போது வரையில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன், இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தனிநபர் தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்தார். இது குறித்து பேசிய அவர், ‘‘சட்டமன்றங்கள் நிறைவேற்றும் தீர்மானங்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்,’ என்று தெரிவித்துள்ளார்.