இஸ்லாமாபாத்: தனது ரஷ்ய பயணத்தால், வல்லரசு நாடு ஒன்று பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுடன் நட்பு பாராட்டுகிறது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடலில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஒரு நாட்டிற்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானது. பாக்கிஸ்தானால் அதன் உச்சக்கட்ட திறனை அடைய முடியாததற்கு காரணம், அது மற்ற சக்தி வாய்ந்த நாடுகளை சார்ந்திருப்பது தான். சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இல்லாத ஒரு நாடு அதன் மக்களின் நலன்களை பாதுகாக்க முடியாது. வெளிநாட்டு உதவிக்கு பிரதியுபகாரமாக மற்றநாடுகளின் விருப்பத்திற்கு அடிபணிவதை விட நாட்டின் நலன்களை வைத்து சுதந்திரமான முடிவுகளை எடுப்பது முக்கியமானது.
எனது அரசாங்கம் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றியது. சுதந்திர அரசின் விவகாரங்களில் ஒரு நாடு எப்படி தலையிட முடியும். ஆனால் அதற்காக அவர்களை குறைசொல்ல முடியாது. அது நம்முடையத் தவறு நாம்தான் அவர்களுக்கு அந்த உணர்வைக் கொடுத்தோம்.
நான் ரஷ்யாவிற்கு சென்று வந்தததால் ஒரு வல்லரசு நாடு நம் மீது கோபமாக உள்ளது. ஆனால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுடன் நட்புறவு பாராட்டுகிறது என்று தெரிவித்தார்.
இம்ரான் கான் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தார். இம்ரான் கானின் இந்த பேச்சு, அவரது தலைமையிலான, பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் அரசாங்கத்திற்கு எதிராக அச்சுறுத்தல் கடிதம் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி சதி தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரை, வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் அழைத்து ஒரு நாள் கழித்து வெளியாகியுள்ளது.
இம்ரான் கான் தனக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் “வெளிநாட்டு சதியின்” விளைவு என்று கூறி வருகிறார். ஆளும் கூட்டணியின் முக்கிய பங்காளியான முட்டாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான் (MQM-P) நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்து எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்ததை அடுத்து, இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பெரும்பான்மையை இழந்தார். அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான முக்கிய வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.