உக்ரைனில் 37-வது நாளாக ரஷ்யப்படையினர் உக்ரேனியப் படைகளுடன் போர் நடத்தி வரும் சூழலில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்(Sergey Lavrov) இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். பிப்ரவரி 24 முதல் உக்ரைனில் நடைபெற்றுவரும் இந்தப் போர் தொடர்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உட்பட மேற்கு நாடுகள் பலவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் ரஷ்யா, உக்ரைன் என எந்த நாட்டுக்கும் ஆதரவளிக்காமல் தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டால், அதிருப்தி அடைந்திருக்கும் அமெரிக்கா ஆரம்பம் முதலே இந்தியாவை விமர்சித்து வருகிறது. அண்மையில், இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய்யைத் தள்ளுபடி விலையில் வழங்குவதாக ரஷ்யா கூறியதை, இந்தியா பரிசீலித்துவருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், “அதிபர் புதினும், பிரதமர் மோடியும் தொடர்பில் உள்ளனர். அவர்(புதின்) பிரதமர் மோடிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறார். இந்திய வெளியுறவுக் கொள்கைகள், சுதந்திரம் மற்றும் தேசிய நலன்களில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன என்று நான் நம்புகிறேன். உக்ரைனில் எங்களின் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும், நாங்கள் எதையும் மறைக்க மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் ஒருதலைபட்சமாக அல்லாமல் முழுமையாக எடுக்கவேண்டும்” என செர்ஜி லாவ்ரோவ் பேசினார்.
மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில், “கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகள் போன்றவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது” என செர்ஜி லாவ்ரோவ்விடம் ஜெய்சங்கர் கூறினார்.
பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செர்ஜி லாவ்ரோவ், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எதை வாங்க விரும்புகிறதோ அதைப்பற்றி விவாதிக்கவும், அவற்றை வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.