ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசியது தொடர்பாக அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ இந்திய எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால் ரஷ்யா உதவிக்கு வரும் என்று இந்தியா எதிர்பார்க்க முடியாது.
மேலும், நிச்சயம் ரஷ்யா உதவிக்கு வராது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீர்த்துப்போகும் படியாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் நடந்துகொண்டாலும் அவர்களை நாங்கள் வெறுமனே விட்டுவிட மாட்டோம்.
அவர்கள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ரஷ்யாவுடனான பண பரிவர்த்தனையை வர்த்தக தொடர்பு செய்யவேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது. இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது அமெரிக்காவின் பொருளாதார தடையின் கீழ் வரவில்லை என்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த கொள்முதல்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது” என்று கூறினார்.