கொழும்பு: இலங்கையில் கையிருப்பாக வைத்திருக்கும் குறைந்த அளவு டீசல் கூட இன்று ஒருநாள் மட்டுமே தேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை ஒடுக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. பேக்கரி மற்றும் இனிபகங்களில் திண்பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ பால் பவுடர் ரூ.2000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை தவித்து வருகிறது. இதனால் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க வாய்ப்பு இல்லாத சூழலில் 37,500 மெட்ரிக் டன் டீசல் இறக்குமதி செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து டீசல் ஏற்றப்பட்ட கப்பல் இலங்கை வரை வந்துள்ளது. ஆனால் டீசலுக்குரிய பணத்தை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.
இதனால் டீசல் விற்பனை கிடையாது என கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெட்ரோல் நிலையங்களில் பலகைகள் தொடங்க விடப்பட்டன. டீசல் விற்பனை நிலையங்களில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. டீசல் வாகனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. பெட்ரோல் வாகனங்கள் மட்டும் பல மணிநேரம் வரிசையில் நின்று குறிப்பிட்ட அளவு டீசல் பெற்று வருகின்றன. இலங்கையில் கையிருப்பாக உள்ள டீசல் இன்று மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும், கையிருப்பு முழுமையாக தீர்ந்துள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனால் நாளைய தினம் அரசு பயன்பாட்டுக்கான செலவுக்கு கூட டீசல் இல்லாத சூழல் ஏற்படும் எனவும் தெரிகிறது. அதேசமயம் டீசலுக்கு செலுத்த வேண்டிய தொகையை ஏற்பாடு செய்து செலுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வந்தால் நாளைய தினம் டீசல் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக கோரி அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது.
இதனையடுத்து கொழும்பு நகரில் இன்று காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.