இன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.
இன்று முதல், அதாவது, ஏப்ரல் 1 முதல், கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டாலும், கனடாவுக்கு வெளியிலிருந்து வரும் யாரானாலும், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு, பொது இடங்களில் மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசியிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ள, கொரோனா தடுப்பூசி பெறாத கனேடியர்கள் மற்றும் பிற பயணிகளுக்கான விதிகளில் மாற்றமில்லை. அவர்கள் கனடாவுக்குள் நுழையவேண்டுமானால், கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்குக் கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தையோ அல்லது அவர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தையோ சமர்ப்பிக்கத்தான் வேண்டும்,
தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்குள் நுழைந்ததும் ஒரு முறையும், எட்டு நாட்களுக்குப் பிறகு ஒரு முறையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுவதோடு, 14 நாட்களுக்குத் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
அத்துடன், கனடாவுக்குள் நுழைவோரில் சிலரை திடீரென தேர்வு செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையும் தொடர்கிறது.
அதே நேரத்தில், கனடாவுக்குள் நுழைவதற்கு முன் செய்யப்படவேண்டிய கொரோனா பரிசோதனை இனி அவசியம் இல்லை என்பதால், அது பயணிகள் கனடா பயணிப்பது குறித்து முடிவு செய்யும் விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனேடிய பெற்றோருக்கு பிறந்தவர்கள் கனேடிய குடியுரிமை கோருவதற்கு என்ன வயது வரம்பு?