இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குலாமி இயக்கம்- பாகிஸ்தான் கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்தது.
ஆனால் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இம்ரான் கான், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது தான் அவருக்கு கவுரவம் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறும்போது, ‘இம்ரான் கானுக்கு இப்போது பாதுகாப்பான பாதை இல்லை. இம்ரான் கான் ராஜினாமா மட்டுமே அவருக்கு கவுரவமான வெளியேற்றமாக இருக்கும். அவ்வாறு செய்ய நான் அவரை பரிந்துரைக்கிறேன்’ என்றார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி துணைத் தலைவர் மரியம் நவாஸ் டுவிட்டரில் கூறும்போது, ‘இந்த உயர்ந்த பதவிக்கு தான் தகுதியானவன் இல்லை என்பதை இம்ரான் கான் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். எல்லோருக்கும் முன்பு அழுவதற்கு பதிலாக அவர் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.