இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்! பதற்றம் – 45 பேர் கைது…

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு,  மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால், அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. இதுதொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோல் டீசல் விலை லிட்டர் ரூ.200ஐ தாண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்களும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹானயில் நேற்று இரவு மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினர்.  அதிபரின் இல்லத்துக்கு செல்லும் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அந்தப் பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. அதிபரின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்தனர். அவர்கள்மீது, பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் பதற்றம் நிலவியது. இதனால், குறிப்பிட்ட பகுதியில் அமைதியின்மையும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது. தொடர் போராட்டம் காரணமாக  அதிபர் வீடு உள்ள பகுதிகளை சுற்றி களனி மற்றும் கல்கிஸ்ஸை போலிஸ் பிரிவுகளில்,  காவல் துறை ஊரடங்கு  உத்தரவு  உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக 45 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் அதன் அருகிலுள்ளபகுதிகளில், இன்று  காலை 5மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.