கொழும்பு:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகக் கோரி, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது; 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதால், அரசை கலைத்து விட்டு, காபந்து அரசை அமைக்கும்படி அதிபர் கோத்தபயாவிடம், கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. நம் அண்டை நாடான இலங்கையில் அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுடன், மின் வெட்டும் இலங்கை மக்களை கோடை வெயிலில் வாட்டி வதைக்கிறது.
மின் வெட்டு
தினமும், 13 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது. இதனால், இலங்கை அரசு மீது, மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுதும் திடீரென நுாற்றுக்கணக்கானோர் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டனர். அவர் பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.
அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, வன்முறை வெடித்தது. ஒரு போலீஸ் பஸ், ஜீப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.தண்ணீரை பீய்ச்சி அடித்து, கூட்டத்தை அப்புறப்படுத்தும் போலீஸ் வாகனம் சேதப்படுத்தப் பட்டது. இதையடுத்து கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. எனினும், நேற்று காலை இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையே கொழும்பு – கண்டி நகரங்களை இணைக்கும் சாலையின் ஒரு பகுதியில், போராட்டக்காரர்கள் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப் பட்டு உள்ளது. வன்முறை தொடர்பாக, 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.காபந்து அரசுஇந்நிலையில், ‘அதிபர் மாளிகையை முற்றுகையிடுவது பயங்கரவாதச் செயல்’ என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் நேற்று, அதிபர் கோத்தபய ராஜபக்சேயை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதார நெருக்கடியை தவிர்க்க, இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது. எனவே, அரசை கலைத்து விட்டு, காபந்து அரசை அமைக்க வேண்டும். இந்த காபந்து அரசில், தற்போது அரசுக்கு ஆதரவு தரும் கூட்டணி கட்சி களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருவதால், அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, இலங்கை அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.