கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டையொட்டி, நேபாள வெளியுறவு அமைச்சர் கலாநிதி நாராயண் கடகா, 2022 மார்ச் 30ஆந் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
கலந்துரையாடலின் போது, தொடர்ந்தும் விருத்தியடைந்து வரும் இருவழிப் பிணைப்பு குறித்து இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் திருப்தி தெரிவித்ததுடன், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நேபாளம் கடைப்பிடித்து வரும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும், 2022 மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கைக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையையும் பாராட்டினார்.
கொழும்புக்கும் காத்மாண்டுவுக்கும் இடையே நேரடி விமான சேவையை நிறுவுவதானது, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பைப் பெருக்குவதற்கு வழி வகுக்கும் என்பதால், இது விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சுற்றுலா, கல்வி, மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் உட்பட எரிசக்தித் துறைகளில் புதிய வணிக வாய்ப்புக்களை அடையாளம் காண இரு நாடுகளினதும் வர்த்தக அறைகள் மற்றும் வணிக தொழில்முனைவோர்களின் வழக்கமான உயர்மட்டப் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் எடுத்துரைத்தார்.
இருதரப்பு நலன்கள் மற்றும் அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாசாரத் துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களை மழுளாய்வு செய்வதற்கான கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்கும் இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வை 2022 மே 30-31ஆந் திகதிகளில் கொழும்பில் கூட்டுவதற்கு இரு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
பௌத்தம் ஒருவருக்கொருவர் நல்லெண்ண உணர்வைத் தூண்டுவதால், லும்பினியை புனித யாத்திரை மற்றும் பௌத்த பாரம்பரிய இடமாக மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக் காட்டினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஏப்ரல் 01