இலங்கையில் ஏற்பாட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹானயில் நேற்று இரவு நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில், அதிபரின் இல்லத்துக்கு செல்லும் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் மிரிஹானவில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. அதிபரின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அதிபர் இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்தனர். நாட்டு மக்கள் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளாதால், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விலை அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் பற்றாக்குறையும் உள்ளது. எரிபொருள், காஸ், மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | எரிபொருள் பற்றாக்குறை..இனி 10 மணி நேர மின் வெட்டு
அதிபரின் வீட்டினை முற்றுகையிட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகையை பிரயோகித்தனர். இதன் காரணமாக சில குறிப்பிட்ட பகுதியில் அமைதியின்மையும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது. தொடர் போராட்டம் காரணமாக அதிபர் வீடு உள்ள பகுதிகளை சுற்றி களனி மற்றும் கல்கிஸ்ஸை போலிஸ் பிரிவுகளில், காவல் துறை ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது.
எனினும், கொழும்பு மற்றும் அதன் அருகிலுள்ளபகுதிகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் போலீஸ் ஊரடங்கு சட்டம் சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதிபரின் இல்லம் மற்றும் மேலும் சில பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கையுடன் இந்தியா 6 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது!