உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 37-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தியது. கீவ் நகர் மீது ஏவுகனை வீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்ளை நடத்தி கீவ்வின் புறநகர் பகுதிகளை கைப்பற்றிய ரஷிய ராணுவத்தால் நகருக்குள் நுழைய முடியவில்லை. அவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின் வாங்கச் செய்தனர். மேலும் கீவ் புறநகரில் சில பகுதிகளை ரஷிய படையிடம் இருந்து உக்ரைன் மீட்டது.
இதற்கிடையே கீவ் நகரை சுற்றி உள்ள படைகளை குறைப்பதாக ரஷியா அறிவித்த போதிலும் அதனை உக்ரைன் நம்பவில்லை.
இந்த நிலையில் கீவ் புற நகரில் கடும் சண்டை நடந்து வருகிறது. புறநகர் பகுதியில் முன்னேறி செல்ல ரஷிய படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். உக்ரைன் மீட்ட பகுதிகளில் ரஷிய படை தீவிரமாக தாக்கி வருகிறது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினர் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். அதேபோல் மற்ற மண்டலங்களின் புறநகர் பகுதிகளிலும் கடுமையாக சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய படைகள் கைப்பற்றியிருந்த செர்னோபில் அணுஉலையில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளதாகவும் உக்ரேனியர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
போரால் கடுமையாக சேதத்தை சந்தித்துள்ள மரியுபோல் நகரில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது. இதையடுத்து உக்ரைன் அரசு, 45 பஸ்களை மரியுபோல் நகருக்கு அனுப்பி மக்களை அழைத்து வந்தது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட புதிய வீடியோவில் கூறும்போது, ‘‘தெற்கு உக்ரைன் மற்றும் டான்பாஸ் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது. நமக்கு முன்னே போர்கள் இருந்தும் நாம் விரும்பும் அனைத்தையும் பெற நாம் இன்னும் கடினமான பாதையில் செல்ல வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையே ரஷிய படைகள் தாக்குதலால் உக்ரைனில் 15 விமான நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்… செர்னோபில் அணு உலையில் இருந்து வெளியேறும் ரஷிய படைகள் – அமெரிக்க பாதுகாப்பு துறை