புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடன்பிறந்த சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2016-ல் உ.பி. முதல்வராக இருந்த முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுக்கும் ஷிவ்பால் சிங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாஜ்வாதி கட்சியை விட்டு விலகி பிரகதீஷில் சமாஜ்வாதி கட்சி – லோகியா (பிஎஸ்பிஎல்) என்ற கட்சியை தொடங்கினார்.
பின்னர் 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். இதனால், யாதவர் வாக்குகள் பிரிந்து, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதைதவிர்க்க, கடந்த பிப்ரவரி – மார்ச்சில் நடந்த உ.பி. தேர்தலில் தனது சித்தப்பா ஷிவ்பால் சிங் உடன் கூட்டணி அமைத்தார் அகிலேஷ். ஆனால், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாதி கூட்டணி 111 இடங்களை மட்டுமே பெற்றது.
என்றாலும் தற்போதைய கூட்டணியுடன் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க தயாராகி வந்தார் அகிலேஷ் யாதவ். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி நடைபெற்ற சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஷிவ்பாலுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால் அக்கூட்டத்தை ஷிவ்பால் புறக்கணித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற சமாஜ்வாதி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தையும் ஷிவ்பால் புறக்கணித்தார். ஷிவ் பால் எதிர்பார்த்த எதிர்கட்சித் தலைவர் பதவியை அகிலேஷ் சிங் ஏற்பது இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ஷிவ்பால் சிங் 2024 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுபோல் எஸ்பிஎஸ்பி கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், கடந்த 2017 தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தவர். இவரை மீண்டும் தங்கள் கூட்டணியில் இழுக்க பாஜக முயன்று வருகிறது. இது தொடர்பாக ஓம் பிரகாஷ், உ.பி. தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ரகசியப் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்கும் பாஜக வலைவீசி இருப்பதாகத் தெரிகிறது.
மாநிலங்களவை எம்.பி. பதவிஅளித்து அவரை மத்திய அமைச்சரவையில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சமாஜ்வாதி கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்வது கேள்விக்குறியாகி விட்டது.
ஆதித்யநாத்தை சந்தித்தார் ஷிவ்பால் பிஎஸ்பிஎல் கட்சித் தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் நேற்று முன்தினம் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இதனால் சமாஜ்வாதி கூட்டணியை விட்டு பிஎஸ்பிஎல் விலகலாம் என்ற ஊகம் வலுத்தது. இந்நிலையில் பிஎஸ்பிஎல் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு ஷிவ்பால் சிங் கூறும்போது, “கட்சியின் எதிர்கால உத்திகள் குறித்து கூட்டத்தில் விவாதித்தோம்” என்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு, “அதுபற்றி கூறுவது இது சரியான தருணமல்ல” என்றார். |