'எங்களிடம் இன்னும் ஏதாவது வாங்க இந்தியா விரும்பினால் பேசலாம்' – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

இந்திய அரசு கச்சா எண்ணெய்யுடன் இன்னும் ஏதாவது பொருட்களை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்ய நினைத்தால் அதுபற்றி பேசத் தயாராக இருப்பதாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியானது. ரஷ்யா, தனது நாட்டிலிருந்து விற்கும் கச்சா எண்ணெய்க்கு ரூபிளில் மட்டுமே பணம் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறியுள்ள நிலையில் ரூபாய், ரூபிள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். பின்னர் அவர் ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா வேறேதும் வாங்க விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

கச்சா எண்ணெய் தவிர்த்து சூரிய காந்தி எண்ணெய்யையும் ரஷ்யாவிடம் வாங்க இந்தியா முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே எதிர்கொள்கிறது. அதேபோல் சமையல் எண்ணெய் தேவையிலும் சூரியகாந்தி எண்ணெய்யே அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அதிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் செர்கெய் பேசியதாவது: * ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா வேறேதும் வாங்க விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம்.

* “இந்தியா ஒரு முக்கியமான தேசம். இந்தியா ஒருவேளை உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்தால் மகிழ்ச்சியே. இந்தியா எங்களின் பொதுவான கூட்டாளி. நாங்கள் உக்ரைனுடன் பாதுகாப்பு நிமித்தமாகவே பேசி வருகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் இதனை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டன. இந்தியா விரும்பினால் மத்தியஸ்தம் செய்யலாம்”

* இந்தியா எங்களிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை அமெரிக்க விரும்பாது. ஆனால் அமெரிக்க அழுத்தத்தால் இந்திய, ரஷ்யா உறவு எவ்விதத்திலும் பாதிக்காது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளில் சுதந்திரமாக செயல்படுகிறது. ரஷ்யாவும் அப்படித்தான் செயல்படுகிறது. ஆனால் அமெரிக்கா பல நாடுகளையும் தனது அரசியல் கொள்கையைப் பின்பற்றுமாறு நிர்பந்தித்து வருகிறது.

* நாங்கள் ஆரம்பத்தில் இருந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகிறோம் ஆனால் உலக நாடுகள் எங்கள் ராணுவ நடவடிக்கையை போர் என்றழைப்பது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.