புதுடில்லி: 2022 – 23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ரூ.8.45 லட்சம் கோடி தொகையானது 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முழு ஆண்டுக்கான ரூ.14.95 லட்சம் கோடி கடன் திட்டத்தில் 56.5 சதவீதமாக உள்ளது. சந்தையில் நடைபெறும் வாரந்திர பத்திர ஏலங்கள் மூலம் 2023 நிதியாண்டின் முதல் பாதியில் அரசு கடன் வாங்கும். ரூ.32,000 முதல் ரூ.33,000 கோடி வரையிலான ஏல வரம்பு இருக்கும். இந்த பத்திரங்களின் முதிர்வுக்காலம் 2, 5, 7, 10, 14, 30 மற்றும் 40 ஆண்டுகள் என பல்வேறு அளவுகளில் உள்ளன.
கடந்த 2022 நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசு பத்திரங்கள் வாயிலாக ரூ.7.24 லட்சம் கோடி கடன் பெற்றது. முழு ஆண்டுக்கான கடன் இலக்கு ரூ.12.05 லட்சம் கோடியாக இருந்தது. இந்தாண்டு முதல் பாதியில் அதை விட சுமார் 1.21 லட்சம் கோடி கடன் பெறுகிறது. முழு ஆண்டு கடன் இலக்கு கடந்த நிதியாண்டை விட ரூ.2.9 லட்சம் கோடி அதிகமாக உள்ளது. மேலும் கருவூலப் பத்திரங்கள் ஏலம் வெளியீட்டின் மூலம் முதல் காலாண்டில் ரூ.2.4 லட்சம் திரட்ட உள்ளது.
Advertisement