புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதால் உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியது.
பிறகு பாதிப்பு சற்று குறைந்ததால் 17 மாதங்களுக்குப் பிறகு சில வழக்குகளை மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் நேரடியாக விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 4 முதல்உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணாஅறிவித்துள்ளார். இதனால் 742 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம்அதன் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்ப உள்ளது.
இதற்கான முடிவு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் 4 மூத்த நீதிபதிகளான யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ் ஆகியோரால் எடுக்கப்பட்டுள்ளது. டெல்லிமற்றும் நாடு முழுவதும் கரோனாவைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் நீதிபதிகள் நேற்று முன்தினம் இம்முடிவை எடுத்துள்ளனர்.
“மூத்த வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக விரும்பினால், அதுகுறித்து அவர்கள் முன்கூட்டியே கோரிக்கை வைத்தால் அவர்களுக்கு அந்த வசதி அளிக்கப்படும்” என்றும் தலைமை நீதிபதி ரமணா கூறினார்.- பிடிஐ