திருமலை: முத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசனம், கரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இவர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 1-ம் தேதி ஆன்லைனில் தேவஸ்தான இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவர் களுக்கு ஆன்லைன் டிக்கெட்டு கள் 8-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென தேவஸ் தானம் நேற்று மறு அறிவிப்பு செய்துள்ளது. இதன்மூலம் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு 65 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதால், அன்றைய தினம் மட்டும் இவர்கள் மதியம் 3 மணிக்கு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக 1,000 டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அங்கப்பிரதட்சண டோக்கன்களும் ஏப்ரல் 2-ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்கள் திருமலையில் உள்ள பிஏசி-1 மையத்தில் மதியம் 2 மணி முதல் வழங்கப்படும். டோக்கன் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு கோயில் குளத்தில் குளித்துவிட்டு கோயிலுக்குள் சென்று அங்கப்பிரதட்சணம் செய்யலாமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.