சென்னை: அதிமுக கர்நாடக மாநில செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும், அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்த வா.புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் கடந்தாண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர்.
இதை எதிர்த்து புகழேந்தி, சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த சம்மன் மற்றும் அவதூறு வழக்கை ரத்துசெய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயணும், கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி, ‘‘கட்சிக்கு புறம்பாகசெயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை கட்சியி்ல் இருந்து நீக்கவும் கட்சித் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என வாதிட்டனர்.
வா.புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ‘‘இதுதொடர்பாக விளக்கம்அளிக்கக் கோரி எந்தவொரு நோட்டீஸூம் அனுப்பப்படவில்லை. பதிலளிக்க வாய்ப்பு அளிக்காமலேயே காரணம் இல்லாமல் கட்சியை விட்டு நீக்கியிருப்பது சட்ட விரோதம்’’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.நிர்மல்குமார்,அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோருக்கு எதிராக வா.புகழேந்தி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.