காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் அரசு தொழில் வளர்ச்சி மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு தொழில்துறையின் (PIPDIC) சார்பில் தொழில் நகரம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு என இருவகை உற்பத்திப் பொருள்களை இங்கு உற்பத்தி செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் இந்த இடத்தில் 20 பெரிய தொழிற்சாலைகள், 20 நடுத்தரத் தொழிற்சாலைகள், 400 சிறு தொழில்களுக்கான இடங்களை அளந்து ஒதுக்கியது. அதற்கான மின்சாரம், சாலை, குடிநீர் வசதியையும் செய்து முடித்தது. இருந்தபோதும் இந்த இடம் குறித்து புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களாக அதிகாரத்தில் இருந்த அரசுகள் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.
இது பற்றி ‘ஈரம்’ சமூகநல அமைப்பின் தலைவர் தம்பி.மாரிமுத்துவிடம் பேசினோம். “புதுச்சேரியில் ஆட்சி அமைகிறபோதெல்லாம் துணைநிலை ஆளுநர், முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரைக்காலுக்கு வருவார்கள். போலகம் தொழில் வளர்ச்சி மையத்துக்கு விசிட் செய்துவிட்டு, “தொழில்முனைவோரை இங்கு வரவழைப்பதன் மூலம் சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்” என்று அறிவித்துவிட்டுச் செல்வார்கள். அதன் பிறகு கருவேலக்காடு மண்டிய இந்த இடத்துக்கு ஒருவரும் வர மாட்டார்கள்
கடந்த 2016-ல் முதல்வராக அமர்ந்த நாராயணசாமி, “இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று போலகத்தில் ரூ.20,000 கோடிக்கு பேட்டரி கார் நிறுவனத்தைத் தொடங்க ஒப்பிக்கொண்டிருக்கிறது’’ என்றார். அதன் பிறகு வெளிநாட்டு தொழில்முனைவோரை புதுச்சேரிக்கு தொழில் தொடங்க அழைக்கச் செல்வதாக சிங்கப்பூர் சென்றார். “சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் 1,500 கோடியில் கண்ணாடி ஆலை தொடங்கவிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நாராயணசாமி முதல்வர் பதவியிலிருந்து இறங்கும் கடைசி விநாடிவரை அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை.
இந்த மையத்தில் நிறுவனம் அமைக்க எவருமே வராததால், தற்போது இந்த இடம் சாலையாகவும், கால்நடை மேய்ச்சல் நிலமாகவும் கிடக்கிறது.
பட்டப்பகலிலேயே லாரிகள் மூலம் இவ்வழியே மணல் கடத்துவதால், இங்குள்ள சாலைகள் முற்றிலும் நாசமடைந்துவிட்டன. இரவில் மின்விளக்குகளின்றி இருண்டு கிடப்பதால் மது, கஞ்சா புழங்கும் சந்தையாகவே மாறிவிட்டது. தப்பித்தவறி இங்கு மாடுகளைத் தேடிக்கொண்டு போகிறவர்களை சமூக விரோதிகள் மிரட்டுவதும், தாக்குவதும் தொடர்கதையாகிவிட்டது. புதுவை அரசில் தொழில்துறைக்கென அமைச்சர், தனித்துறை, வாரியம் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனியாவது புதுச்சேரி அரசு இந்த மையம் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.