“நான் டாஸ்மாக்கை எதிர்க்கிறேன். இதனால் பெண்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். குடும்ப வன்முறைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு பெண்ணாக என்னால் அவர்கள் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியும். முதல்வரின் பார்வைக்கு இதனை நிச்சயம் கொண்டு செல்வேன்” என்று உறுதிபட பேசுகிறார் நாகரத்தினம்.
மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும் ஈரோட்டின் மேயராக பதவியேற்று ஒரு மாதத்தை கடந்திருக்கிறார் நாகரத்தினம். தொடர்ந்து மக்கள் பணிக்காக ஓடிக் கொண்டிருக்கும் நாகரத்தினத்திடம் இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்காக ஓர் உரையாடல்.
மேயராக பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது, அனுபவம் எப்படி உள்ளது?
”கடந்த 20 வருடங்களுக்கு மேலாகவே அரசியலை கூர்ந்து கவனித்து வருகிறேன். பல நேரங்களில் களத்துக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை பேசியிருக்கிறேன். இந்த நிலையில் இந்த மேயர் பதவி எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.”
* அரசியல் ஆர்வம், உங்களை பற்றி..
”எனது கணவர் 35 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கிறார். அவருடைய ஊக்குவிப்பில்தான் அரசியலில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு வரை நான் படித்து இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே திமுக கொள்கை மீது தீவிரம் இருந்ததது. அதுவே பின்னாளில் எல்லாவற்றுக்கு பாதை போட்டுக் கொடுத்தது.”
* உங்களுக்கு பிடித்த ஆண் அரசியல் தலைவர் ?
”எனக்கு கலைஞர் பிடிக்கும். அவரை யாராவது கருணாநிதி என்று அழைத்தால் கூட கோபம் வந்துவிடும். அந்த அளவுக்கு கலைஞர் மீதும் மரியாதை உண்டு.”
* பெண் தலைவர்?
”தைரியத்திற்காக இந்திரா காந்தி பிடிக்கும்.”
* ஈரோட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் என்னென்ன? மக்களின் முக்கியக் கோரிக்கையாக எது உள்ளது?
”பல இடங்களில் பாதாள சாக்கடை பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உள்ளது. மக்கள் அதனைத்தான் பிரதானமாகக் கூறுகிறார்கள். அடுத்து மோசமான உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை உடனடியாக கண்டறிந்து தெரிவிக்குமாறு வார்டு கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளிடமும் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.”
*ரசாயன கழிவுகள் ஈரோட்டில் கலக்கும் பிரச்சினை உள்ளதே… அதற்கு?
“இது நீண்ட பிரச்சினை, விரைவில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.”
* டாஸ்மாக்கிற்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தீர்களே?
”என்னளவில் நான் இந்த டாஸ்மாக்கை எதிர்க்கிறேன். இதனால் பெண்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். குடும்ப வன்முறைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றால் அங்கேயும் பெண்களுக்கு நிம்மதி இல்லை. எங்களுக்கு இலவசம் கூட வேண்டாம், டாஸ்மாக்கை மூடுங்கள் என்று பெண்கள் கூறுகிறார்கள். ஒரு பெண்ணாக என்னால் அவர்கள் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியும். அதன் வெளிப்பாடே என் கருத்து. முதல்வரின் பார்வைக்கு இதனை நிச்சயம் கொண்டு செல்வேன். ஆண்கள் தன்னளவில் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.”
* பெண் கவுன்சிலர், மேயர்கள் ஆண்களின் கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?
”இது நிச்சயம் தவறு. நான் தன்னிச்சையாகத்தான் செயல்படுகிறேன். எதாவது சந்தேகம் இருந்தால் அரசியல் அனுபவம் காரணமாக என் கணவரிடம் கேட்பேன்; அதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.”
* அரசியலுக்கு வரும் இளம்பெண்களுக்கு உங்கள் ஆலோசனை…
”பதவிக்காக யாரும் அரசியலுக்கு வரக் கூடாது.. சமூக அக்கறை வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு வேண்டும். நானும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். நான் மேயர் ஆகிவிட்டேன் என்றெல்லாம் கருதவில்லை.”
* அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் பயணம்…
”அடுத்த 5 வருடங்கள் மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். எனக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் சேவையே பிரதானம்.”
தொடர்புக்கு: [email protected]