முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.
அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகு மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகம் நலன் சார்ந்த 14 கோரிக்கைகள் அடங்கிய 41 பக்க மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
இதன் பிறகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து விரிவாக விளக்கி கூறினார்.
தமிழ்நாடு இல்லத்தில் நேற்றிரவு தங்கிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். அது மட்டுமின்றி தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவும் கேட்டுக்கொண்டார். சுமார் 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
அதன் பிறகு டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால்வித்யாலயா பள்ளிக்கூடத்தை பார்வையிட சென்றார்.
நவீன மாதிரி பள்ளியான இந்த பள்ளிக்கூடத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வாசலில் நின்று வரவேற்று அழைத்து சென்றார்.
அதன் பிறகு அரசு பள்ளிக்கூடத்தின் நவீன மாற்றங்கள் குறித்தும், அங்கு கற்பிக்கப்படும் பாடங்கள், வகுப்பறைகள் குறித்தும் குறும்படம் திரையிடப்பட்டது.
இவற்றை டெல்லி முதல்- மந்திரியுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்த்தார். டெல்லி கல்வி இயக்குனர் ஹிமான்ஷூ குப்தா அரசு பள்ளியின் கல்வி தரம், டெல்லியின் கல்வி மாடல்களை விளக்கி கூறினார்.
இதன் பிறகு அங்கிருந்த மாணவர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
பின்னர், அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆம்ஆத்மி மோஹல்லா கிளினிக் என்ற ஆஸ்பத்திரியையும் சென்று பார்வையிட உள்ளார். அவருக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறுகிறார். இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லம் திரும்புகிறார்.
இன்று மாலை 4.30 மணிக்கு அவர் மத்திய மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து பேசுகிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளது.