நாட்டிலேயே முதல் மாநிலமாக முகக்கவசம் அணிவது உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கி மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில்
ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா முதல் அலை ஓய்ந்து, 2வது அலை, 3வது அலை, ஒமைக்ரான் பரவல் என அடுத்தடுத்த அலைகள் உருவாகி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
தற்போது கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் நேற்றுடன் முடிவடைவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தெரிந்தால் மாநில அரசுகளே தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
நாட்டிலேயே, கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், தற்போது, கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டது. இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்ரல் 2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மகாராஷ்டிர மாநில புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வருகிறோம். இன்று அந்த துயரம் மறைந்து வருவதாகத் தெரிகிறது. ஒரு புதிய தொடக்கமாக, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமலில் இருந்த பேரிடர் மேலாண்மை சட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளும், கொரோனா ஊரடங்குக்கு முன்பாக இருந்தது போல இயங்கலாம்.
மாநிலத்தில் அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால்கள், மல்டிபிளக்ஸ்கள், உணவகங்கள் மற்றும் பார்கள், விளையாட்டு மைதானங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், ஆரோக்கிய மையங்கள், அழகு நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் எவ்வித கொரோனா கட்டுபாடின்றி 100 சதவீத திறனுடன் செயல்படலாம். அதேநேரம் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் முகக்கவசம் அணியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த செய்திதீர்ப்பை செயல்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை!