சென்னை:
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீட்டெடுக்கவும்,கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு நடைமுறையில் இருக்கும் தடையை நீக்கவும், 3-3-2022 முதல் 31-3-2022 வரை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்த திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 500 நபர்களும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 250 நபர்களும் பங்கேற்கலாம் என்ற தடையை நீக்குவது குறித்தும் முதல்- அமைச்சரிடம் ஆலோசனை மேற் கொள்ளப்பட உள்ளது.
மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக கவசம் அணிவதற்கான தடையும் முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்… டெல்லி, மகாராஷ்டிராவில் இனி முககவசம் அணிவது கட்டாயமில்லை