சென்னை: சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது என்று அதனை உங்கள் திறமையினால் செழுமைப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் மூலம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு நேரடியாக சென்று, அங்குள்ள நிகழ்வுகளை கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர்கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா, அன்பில் மகேஷ் உள்பட பலர் சென்றனர். தொடர்ந்து டெல்லியில் செயல்பட்டு வரும் மொஹல்லா கிளினிக்குகளையும் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,
டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் தொழில் வலிமை (#Business Blasters) முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன்.
மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்.
தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைக் கடந்து தங்களது அறிவையும் திறனையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! செழுமைப்படுத்துங்கள்! என்று கூறியுள்ளார்.