திருமலை: ஆந்திர முதல்வராக ெஜகன்மோகன் பதவியேற்றதும் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மற்றும் வார்டு செயலகங்கள் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி அனைத்து கிராமங்களிலும் செயலகங்கள் உருவாக்கப்பட்டது. இவற்றில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சான்றுகள் வழங்கப்படுகிறது. ஆனால் போதிய கட்டிட ஏற்பாடுகளுடன் இந்த திட்டத்தை உருவாக்காததால் ஆங்காங்கே உள்ள அரசு பள்ளி உள்ளிட்ட கட்டிடங்களில் செயல்படுகிறது.இதனால் பள்ளிக்குள் வெளிநபர்கள் வந்து ெசல்லும் நிலை ஏற்படுவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதாகக்கூறி கடந்த 2020ம் ஆண்டு பொதுநலன் வழக்கு ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. அப்போது இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக அரசு பள்ளிகளில் உள்ள செயலகங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை பொறுப்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான விஜய்குமார், ஷியாமளாராவ், சின்னவீரபத்ருடு, கோபாலகிருஷ்ணதிவேதி, எம்.எம்.நாயக், புடிதிராஜசேகர், ஸ்ரீலட்சுமி, கிரிஜாசங்கர் ஆகியோர் அமல்படுத்தவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக நேற்றிரவு ஆந்திர ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அதிகாரிகளின் அணுகுமுறை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிப்பது சரியல்ல என கடும் அதிருப்தி தெரிவித்தனர். ேமலும் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி, 2 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில் ஆஜரான அரசு வக்கீல்கள், சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்து வேறு தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையேற்ற நீதிபதிகள், சிறை தண்டனைக்கு பதிலாக ஒரு வருடத்திற்கு மாதத்தில் ஒருநாள் சமுக நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்ய வேண்டும். மேலும், ஒரு வருடத்திற்கு விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு தினசாி ஒருநாள் சாப்பாடு செலவை ஏற்கவேண்டும் என உத்தரவிட்டது. ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக அரசுக்கும் எதிராக பல்ேவறு தீர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான தீர்ப்புகளில் மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் அணுகுமுறை குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். கடந்த சந்திரபாபு ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட ஆந்திர தலைநகரம் அமராவதி என்பதை ஜெகன் ஆட்சி பொறுப்பேற்றதும் ரத்து செய்தது. இதற்கு அண்மையில் நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.