சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது விசாரணை

பீஜிங் :

சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன போலீசாரால் கைது செய்யப்படுகிற வரையில், அங்கு சீன அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’னில் பணியாற்றி வந்தார்.

இவர் தனது பணிக்காலத்தில் நாட்டின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவரது கைது நடவடிக்கையில், நீதியின் அடிப்படை தர நிலைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் ஏதுமறியாதவர் என கூறுகின்றனர்.

அவர் மீது பீஜிங் கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ரகசிய விசாரணை தொடங்கி உள்ளது.

இதையொட்டி சீனாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் கிரகாம் பிளெட்சர், கோர்ட்டுக்கு வெளியே நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “இது மிகுந்த கவலைக்குரியது. திருப்தியற்றது. ரகசியமாக நடத்தப்படுகிற விசாரணை செல்லுபடியாகும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. செங் லீயின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக ஆஸ்திரேலியா தொடர்ந்து குரல் கொடுக்கும்” என கூறினார்.

ஆனால், சீனாவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக செங் லீ காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் கூறிய சீன அரசு பின்னர், அவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கூறியது.

இவரது கைது நடவடிக்கையால், இவரது குழந்தைகளும், வயதான பெற்றோரும் தவிக்கிறார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.