சென்னையை அடுத்த எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரியில் “பருவநிலை மாற்றம்” தொடர்பான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
“பருவ காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இது குறித்து பல மாணவர்களிடையே குறைவான விழிப்புணர்வே உள்ளது. இந்தக் காலநிலை மாற்றத்தினால் வருங்கால தலைமுறையினருக்கு தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும். பாராளுமன்றத்தில் நான் இந்த ஆபத்து மிகுந்த பிரச்சினையை பற்றி தெரிவித்திருக்கிறேன்.
இந்த காலநிலை மாற்றத்திற்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். புவி வெப்ப நிலையைப் பொறுத்தவரை சாதாரண நிலையை விட தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் சென்னையில் அதிக அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. என்னைப் போன்ற பலரும் பலவித யோசனைகளையும், எப்படி சென்னையை பசுமை தாயகம் மூலம் வடிவமைப்பது பற்றிய யோசனையும் வழங்கியிருக்கிறோம்.
40 வருடங்களுக்கு முன்பு கோவில்களுக்கு தேவையான தண்ணீரை கூவம் ஆற்றில் இருந்து தான் எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் தற்போது அந்த ஆறு அசுத்தம் அடைந்து உள்ளது.
மொத்தமாக 37 ஆயிரம் ஆறுகள் இருக்கிறது, அவற்றை நாம் தான் சீர் முறைப்படுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சத்தை நாம் அதிகளவில் சந்திப்போம். ஆதலால் வெள்ளத்தை நாம் ஒரு வரமாகவே பார்க்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக மிக குளிர் காலநிலை கொண்ட கனடாவில் ஏற்கனவே வெப்ப அலையினால் உயிர் பாதிப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.
பனிப் பாறைகளும் உருக தொடங்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு வகையில் காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக 911 மில்லி மீட்டர் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் காலநிலை மாற்றத்திற்காக குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசு காலநிலை மாற்றத்தை அவசர பிரகடனமாக செய்ய வேண்டும். காலநிலை மாற்றத்திற்கான இளைஞர்கள் குரல் கொடுக்க இதுவே சரியான நேரம்.
இந்த காலநிலை மாற்றம் காரணமாக உலகில் மிக அதிக அளவில் அகதிகள் உருவாகும் நிலை ஏற்படும். ஏற்கனவே சென்னையில் வெள்ளத்தின் போது அகதிகளாக நாம் இருப்பதை பார்த்திருக்கிறோம். அடுத்த 50 ஆண்டுகளில் இந்த இடம் அமைந்துள்ள பகுதி கடற்கரையாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருடத்திற்கு 4,000 பேர் மாசு பிரச்சினையினால் இறந்து போகிறார்கள்.
சென்னையில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 8000 ஆக உயர்த்தப்பட வேண்டும். மேலும், அனைவருக்கும் இலவச பயணம் எனவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு குறையும். இதனால் காற்று மாசு பெருமளவில் குறையும்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.