ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் முதல் படம்… இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் இயக்கியிருக்கும் படம்.
’பிசினஸ் பண்ணப்போறேன், அதுக்கேத்தமாதிரி படிச்சுக்குறேன். என்ஜினியரிங் வேண்டாம்’ என்று சொல்லும் கனல் அரசன் (ஜி.வி பிரகாஷ்). கடலூரிலிருந்து அப்பாவின் நிர்பந்தத்தால் பிடிக்காத என்ஜினியரிங் படிப்புக்கு, 2 லட்சம் ரூபாய் டொனேஷன் கொடுத்து சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் சேர்கிறார். ஆனால், அந்தக்கல்லூரி தகுதியே இல்லாத ஒன்று. மாணவர் சேர்க்கைக்காக ஆள்பிடிக்கிறார்கள் என்று அங்கு வந்தப்பிறகுதான் தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் சேர்க்கைக்காக ஏஜெண்ட்டாய் மாறி, பெற்றோர்களிடம் பேசி ஆள் பிடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவிற்கு சீட் பிடிக்கும் ஏஜெண்ட் ரவி வர்மாவாக கெளதம் மேனன்.
கந்துவட்டிக்காரர் ஒருவரின் மகனுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கெளதம் மேனன் டீமுக்குத் தெரியாமல் அதிக பணம் பெற்றுக்கொண்டு சீட் பிடித்துக்கொடுக்கிறார் ஜி.வி பிரகாஷ். ஆனால், அது விபரீதத்தில் முடிய ஜி.வி பிரகாஷுக்கும் அவரது நண்பர்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடியால் ஏற்படும் பெரிய பிரச்சனை, விபரீத முடிவு, மருத்துவப் படிப்பிற்காக பெற்றோர்களிடம் கொள்ளையடிக்கும் கல்வி நிறுவனங்கள், ஏஜெண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை பளிச்சென்றும் பரபரவென்றும் படம் பிடித்து காட்டியிருக்கிறது ‘செல்ஃபி’.
கெத்து பேச்சு, வெத்து பில்ட் அப் என ஒரு வட்டத்துக்குள்ளெ நடித்துக்கொண்டிருந்த ஜி.வி பிரகாஷ் இப்போதுதான், தான் யார் என்பதை ’செல்ஃபி’ எடுத்து பார்த்திருக்கிறார். அவர், பேசும் கிராமப்புற மாணவருக்கே உரிய பேச்சுவழக்கும் யதார்த்தம்.இருந்தும், வழக்கம்போல இந்தக் கதைக்கும் தாடியுடன்,சிகரெட் பிடிப்பது, குடித்துக்கொண்டே இருப்பது நெருடல்.
ஜி.வி பிரகாஷின் கதாப்பாத்திரத்துக்கு செம்ம டஃப் கொடுத்திருப்பவர் கெளதம் மேனன். அவரது, டயலாக் டெலிவரியும் மேனரிஸமுமே மிரட்டுகிறது. எந்த இடத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும், எந்த இடத்தில் ஃபைட் செய்யவேண்டும், எந்த இடத்தில் சமாதானம் ஆகவேண்டும் என்று பக்கா ஜென்டில் புரோக்கராக அதகளப்படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.
ஜி.வி பிரகாஷ், வாகை சந்திர சேகர், வர்ஷா பொல்லம்மா, சங்கிலி முருகன், தங்கதுரை, குணாநிதி என பலர் இருந்தாலும் செல்ஃபிக்கு மெகா பிக்சல், லைட்டிங், வண்ணம், அழகு அத்தனை பலத்தையும் கொடுத்திருப்பது என்னவோ கெளதம் மேனனின் நடிப்புதான். சேர்மன் சங்கிலி முருகனிடம் அடக்கம் காட்டுவதாகட்டும் அவரது மருமகனை அதட்டுவதாகட்டும் பணத்தைக் கொடுத்து ஏமாந்த பெற்றோரை சாஃப்ட்டா ஹேண்டில் செய்வதாகட்டும் காட்சிக்கு காட்சி வேற லெவல் கெத்துக் காட்டி நடித்திருக்கிறார்.
நாயகி வர்ஷா பொல்லம்மா, இப்படத்தில் செஃல்பி ஸ்டிக் போலத்தான். கதைக்குள் நாயகியாக இல்லை அந்தக் கதாபாத்திரம். வழக்கம்போல காதல், அட்வைஸ், ரொமான்ஸ்.. அவ்வளவுதான். ஜி.வி பிரகாஷ் நண்பனாக நடித்துள்ள நசீரின் (குணாநிதி) கதாப்பாத்திரம் கதையில் முக்கியமானது. ‘போலீஸ்க்கிட்ட வந்து பாதுகாப்பு கேக்குறியே?’ என்னும் போலீஸ் ஏ.சி சில காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். படித்து முடித்து வேலைக்குப் போய், படிப்பிற்காக வாங்கிய கடனை அடைப்பான் என கனவுகளோடு காத்திருக்கும் அப்பாவாக நடிப்பில் ’வாகை’ சூடுகிறார் வாகை சந்திரசேகர்.
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை கதையோடே பயணித்து நம்மை கதிகலங்க வைக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு மட்டுமல்ல, வித்தியாசமான சண்டைக் காட்சிகளும் மிரட்டியிருக்கிறது.
’எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பணம் தர்றேன். பிள்ளைக்கு சீட் வேணும்’ என்று புரோக்கர்களிடம் பணத்தை கொட்டிக்கொடுக்கும் எல்லா பெற்றோரும் ‘இன்னோசெண்ட்’ கிடையாது என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். கல்லூரி சேர்மன், சேர்மனின் மருகன், சீட் வாங்கிகொடுக்கும் புரோக்கர், அதற்கு எதிராக சீட் வாங்கிக்கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் என கதையில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று கதையை நகர்த்தியிருப்பதுதான் படத்தின் பலம். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிகளில் சேர்க்கும்போது பெற்றோர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், என்ன நடக்கிறது, என்று சாட்டையை சுழற்றி பாடம் எடுக்காமல், படமாக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி செயின் பறிப்பு, திருட்டு என சிக்கிக்கொள்ளும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் பயமுறுத்தும் உண்மைகளை இப்படத்தில் வெளிச்சம்போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குநர். சம்பளத்தை மிகவும் குறைவாக கொடுத்து, கல்லூரி பேராசிரியர்களைக்கூட சீட் பிடிக்கும் புரோக்கர்களாக மாற்றிவைத்திருக்கின்றன என்ற உண்மையும் பகீர் ரகம்.
’நீட் நீட்ன்னு உயிரை எடுக்கிறாங்களே என்ன அது?”.. “நீட்லாம் தடுக்க முடியாது. நீட்டால எம்.பி.பி.எஸ் படிக்க முடியாமப் போய்டுவாங்க. அதுல காலியாகும் இடங்களை வச்சி நாம எப்படி காசு பறிக்கிறோம் என்பதுதான் முக்கியம்” – பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் டொனேஷன்களை மையப்படுத்திய கதையில் ‘நீட்’ தேர்வு குறித்தும் லேசாகத் தொட்டுச் செல்கிறது திரைக்கதை.
சின்ன சின்ன குறைகள் இருக்கலாம். மற்றபடி, முதல் படம் எனச் சொல்ல முடியாதபடி தெளிவாக இயக்கி இருக்கிறார் மதிமாறன். கதாபாத்திரங்களின் தேர்வே படத்தின் பெரிய வெற்றி. முதல் பாதியை வேகம் என்றால் இரண்டாம் பாதி அதிவேகம். முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே மதிமாறனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மக்களுக்கு விழிப்புணர்வூட்டும், அதே சமயம் சுவாரஸ்யமான படத்தை எடுத்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளரிடம் நாமும் தாராளமாய் எடுத்துக்கொள்ளலாம் ’செல்ஃபி’.
-வினி சர்பனா