சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 60 நாட்களில் மட்டும் பஞ்சு விலை கேண்டி ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தமிழ் நாட்டில் உள்ள ஆலைகள் பல்வேறு வழிகளில் நூல் உற்பத்தியினை குறைத்துள்ளதாகவும், நூற் பாலைகள் உற்பத்தியை குறைத்தது காரணமாக தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 சதவீத வரியை நீக்கினால் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், பஞ்சு விலை குறைப்பு என்பது மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் தான் சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியைபாதிக்கும் பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன.
எனவே, தமிழ்நாட்டின் பிரதானத் தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில், பஞ்சு விலையை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்… சென்னை கோட்டத்தில் 95 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்