“ஜெயிலுக்குப் போக நாங்க தயார்" – காவலர்களை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர்; போலீஸார் வழக்கு பதிவு!

சென்னையில் அடுத்தடுத்து தி.மு.க கவுன்சிலர்களின் கணவர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், 51-வது வார்டின் தி.மு.க கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் உட்பட 6 பேர் மீது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ப்ராவின் டேனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். என்ன நடந்தது என்று வண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “காவலர் தியாகராஜன், காவலர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த 29.3.2022-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது இரவு 12.30 மணியளவில் எம்.சி. ரோடு, ஜெ.பி கோயில் சந்திப்பு பகுதியில் ஆறு பேர் மது அருந்தி போதையில் அமர்ந்திருந்துள்ளனர். மேலும் அவர்கள் ரோட்டின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

முதல் தகவல் அறிக்கை

அதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, `எங்களை கேட்பதற்கு நீங்கள் யார், எங்களை இதுவரையில் யாரும் இப்படி கேட்டது கிடையாது. நீ யார்?’ என சத்தமிட்டுள்ளனர். மேலும், `நான் நினைத்தால் உன்னை காலி செய்துவிட்டுவேன். ஜெயிலுக்கு போக நாங்க தயார், ஒழுங்கா சென்றுவிடு!’ என்று காவலர்களை அங்கிருந்தவர்கள் மிரட்டியுள்ளனர். அதை காவலர் தியாகராஜன் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அதைக் கண்ட அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் செல்போனையும் பறிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து காவல் நிலையத்துக்கு வந்த காவலர் தியாகராஜன், நடந்தச் சம்பவத்தை இன்ஸ்பெக்டரிடம் கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தார். அதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 143, 294 (பி), 353, 506 (1) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

போலீஸார் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் ஜெகதீசன் மற்றும் அவருடன் இருந்த பெயர் தெரியாத 5 பேர் குற்றம்சாட்டபட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் காவலர்களுடன் ஜெகதீசன் தலைமையிலான டீம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “ஜெகதீசன், வழக்கறிஞராக உள்ளார். இவரின் மனைவிதான் இந்த வார்டின் கவுன்சிலர். சம்பவத்தன்று காவலர்களை ஜெகதீசனும் அவரின் ஆதரவாளர்களும் தரக்குறைவாக பேசியதால் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன்

காவலர்களுடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன்அடிப்படையில் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ஜெகதீசனிடம் பேச அவரின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.