டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரத்து செய்ய மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காரில் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும் உத்தரவை, கடந்த பிப்ரவரி மாதத்தில், டெல்லி அரசு திரும்பப் பெற்றிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் முகக்கவசம் தொடர்பான அபராதமும் ரத்து செய்யப்படுவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கசவம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தவிர மற்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் நேற்றுடன் (மார்ச் 31ம் தேதியோடு) முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் எழுதிய கடிதத்தில், “இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது முதல் ‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்’ கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சரவை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 31ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை நீட்டிக்க தேவையில்லை என்றும் கடந்த 7 வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு செங்குத்தான சரிவை கண்டுள்ளது; இவை மட்டும் அல்லாமல் கொரோனா பாதிப்பு நேர்மறை தொற்றின் விகிதம் 0.28% ஆக குறைந்துள்ளது.
மேலும், 181.56 கோடி தடுப்பூசிகள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது காரணமாக தொற்று பாதிப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாநில அரசுகள் நீக்கலாம் எனவும் அக்கடிதத்தில் அஜய் பல்லா கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளையில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
சமீபத்திய செய்தி: தமிழக விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு 2 படுக்கைகள் ஒதுக்கீடுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM