பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை, தி.மு.க தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், இடதுசாரித் தலைவர்களும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30-ம் தேதி தொடங்கியது.
அந்த மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை ஒன்றை விடுகிறேன். தமிழகத்தில் மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” என்றார்.
மேலும், “ஆர்.எஸ்.எஸ் எங்கே இருந்தாலும் அங்கேயும் செல்வோம். மதச்சார்பின்மையைக் குலைக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். செய்கிற செயல்களையும் தடுத்து நிறுத்துவோம். கோவில் என்பது இறை நம்பிக்கை வாழ்கிற இடம். அங்கு மதம் கிடையாது. எனவே, கோயில் கமிட்டிகளிலும் கோயில் நிகழ்வுகளிலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிற பண்பாடு, கலாசாரப் பிரசாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும்” என்றார் கே.பாலகிருஷ்ணன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், அண்ணாமலையை ஏற்கெனவே விமர்சித்திருக்கிறார். “தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அடிப்படையில்லாத, ஆதாரமற்ற புகார்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பேசிவருவது அருவருப்பான அநாகரிக அரசியல். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” இரா.முத்தரசன் விமர்சித்தார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை இடதுசாரித் தலைவர்கள் விமர்சிப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.
“தமிழகத்தில் மதப் பற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக இந்து வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அதற்கான முயற்சியை முன்னெடுப்பவராக தற்போது அண்ணாமலை இருக்கிறார். அந்த வகையில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். மதப் பதற்றத்தை ஏற்படுத்தி, இந்து வாக்கு வங்கியை உருவாக்குவது என்கிற முயற்சி மிகவும் ஆபத்தானது. உதாரணத்துக்கு, உத்தரப் பிரதேசத்துக்கெல்லாம் போகத் தேவையில்லை. நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்று பார்த்தாலே போதும்.
ஹிஜாப் பிரச்னையைக் கிளப்பினார்கள். அதை எங்கெங்கோ கொண்டுசென்று, கடைசியில் ஹிஜாப் அணிந்துவரும் பெண்களைத் தேர்வு எழுதவிடாமல் செய்துவிட்டனர். பிறகு, இந்து கோவில் விழாக்களில் சாலையோரமாக கடைகளைப் போட்டு வியாபாரம் செய்யும் இஸ்லாமியர்களின் பிழைப்பில் கைவைத்திருக்கிறார்கள். கர்நாடகாவில் தற்போது திருவிழா சீஸன் என்று சொல்லப்படுகிறது. கோயில் திருவிழா நடக்கும் இடத்தில், ‘இங்கு பிற மதத்தவர் கடை போடக்கூடாது’ என்று பேனர்கள் வைக்கிறார்கள். இது, கர்நாடகா முழுவதும் பரவியிருக்கிறது.
ஏழை முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான வேலையை பா.ஜ.க-வினர் செய்கிறார்கள். கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவரும், தமிழக பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி, ‘முஸ்லிம் கடைகளில் மட்டன் வாங்கக் கூடாது’ என்று பேசியிருக்கிறார். ‘அவர்கள் ஹலால் செய்கிறார்கள். அதனால் வாங்கக் கூடாது’ என்கிறார்கள். ஏழை இஸ்லாமியர்களைக் குறிவைத்து இப்படிச் செய்வது மனிதவிரோதச் செயல்.
அதே பாணியை அண்ணாமலை தமிழகத்தில் பின்பற்ற நினைக்கிறார். மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தை சி.பி.ஐ வரை கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள். ஆனால், இதற்கும் மதமாற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் கூறிவிட்டது. தமிழகத்தில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் மதப் பகைமையைத் தூண்டுவது, மதப் பதற்றத்தை உருவாக்குவது என்று கிளம்புகிறார்கள்
மதப் பதற்றம் மிகவும் அபாயகரமானது. மதப் பதற்றம் ஏற்பட்டால் மக்களால் வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்கு நல்லபடியாகத் திரும்ப முடியுமா? மாணவர்களால் பள்ளி, கல்லூரிகளுக்குப் போய்விட்டு நல்லபடியாக வீடு திரும்ப முடியுமா? எனவே, மதப் பதற்றத்தை ஏற்படுத்தினால் நிச்சயமாக அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நிற்கும்… அவர்களின் முயற்சியை முறியடிக்கும்.
இந்து வேறு, கிறிஸ்தவர் வேறு என்று உருவாக்கி, உ.பி-யைப் போல, கர்நாடகாவைப் போல தமிழகத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் காக்கக்கூடிய முக்கியமான பொறுப்பு கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கிறது என்கிற அடிப்படையில்தான், அண்ணாமலைக்கு எதிரான விமர்சனத்தை எங்கள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்திருக்கிறார். அந்த விமர்சனம், அண்ணாமலை மீது தனிப்பட்ட முறையிலானது கிடையாது. மதப் பதற்றத்தை உருவாக்குகிற வகுப்புவாத அரசியலை எதிர்க்கிறோம். அந்த வகையில், அண்ணாமலையை விமர்சிக்கிறோம்
தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு எதிராக பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, முதல்வரின் ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்துள்ளார். துபாய்க்கு முதல்வர் போகிறார் என்றால், அங்கு போய் என்ன சாதித்தீர்கள் என்று ஓர் எதிர்க் கட்சி என்ற முறையில் அண்ணாமலை கேட்கலாம். ஆனால், தமிழக முதல்வர் ஐயாயிரம் கோடி ரூபாயை துபாய்க்கு கொண்டுசெல்கிறார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை சொல்கிறார். விமான நிலையங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன. ஐயாயிரம் கோடி ரூபாயை முதல்வரால் எடுத்துச்செல்ல முடியுமா? எனவே, அதற்காக அண்ணாமலைக்கு தி.மு.க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்கிற விமர்சனங்களில் நியாயம் இருக்க வேண்டும்… ஏதாவது ஓர் ஆதாரம் இருக்க வேண்டும். மனம்போன போக்கில் பேசுகிற அரசியல் தலைவரை நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம்” என்றார் அருணன்.