திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு – அம்மாபட்டி சாலையில் உள்ள குளக்கரையில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், பெண்ணுக்கு கிணறு கொடுத்த கல்வெட்டு, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, “பாய்ந்த தோற்றத்தில் காணப்படும் குதிரையின் மேல், வீரன் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கும் குதிரைவீரன் நடுக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடுக்கலில் அந்த வீரன் தலையில் மகுடம் சூடி கொண்டும், இடது கை குதிரையின் கடிவாளத்தை பிடித்தவாறும், இடையில் குறுவாள் சொருகிய படியும், வேல் ஒன்றை குதிரையின் தலைக்கு மேல் நீட்டியபடியம் தோற்றம் அளித்தார்.
1625 – ஆம் ஆண்டு ராமகிரி பாளையத்தின் எல்லையில் போர் நடந்த கால கட்டத்தில் இந்த குதிரைவீரன் நடுக்கல் நடப்பட்டதாக தெரிய வருகிறது.
தற்போது இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குதிரைவீரன் நடுக்கலை காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
மேலும், இந்த நடுக்கல்லில் இருந்து சுமார் 600 அடி தூரத்தில் 1814 – ஆம் ஆண்டு பெண் ஒருவருக்கு கிணறு வழங்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. அதில் பொம்மி நாயக்கர் என்பவர் பசு நீர் குடிக்கும் தொட்டி ஒன்றை கொடையாக கொடுத்துள்ளார் என்ற விபரமும் பொறிக்கப்பட்டுள்ளது’ என்று வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்தனர்.