கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கோவை கருமத்தம்பட்டியில் தங்கி வேலை பார்த்து கொண்டு வருகிறார். அப்போது அவரின் பெற்றோரிடம் அன்றாடம் கைபேசியில் தொடர்பு கொள்வது வழக்கம்.
கடந்த 21 -ம் தேதி பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போது, அந்த சிறுமி ஃபோனை எடுக்க வில்லை. இதனால் அந்த நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது சிறுமி மாயமானது தெரிய வந்தது.
இதன் பிறகு கோவைக்கு வந்த சிறுமியின் பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமியின் சொந்த ஊரை சேர்ந்த 38 வயது நிரம்பிய தேவேந்திரன் என்பவர் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. தேவேந்திரனின் செல்போன் நம்பரை வாங்கி அதன்மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட பின்னர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருப்பதாக செல்போன் டவர் காண்பித்தது.
இதையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் கண்ணூர் சென்றனர். அங்கு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு, இருவரையும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், தேவேந்திரனுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால், மகன் மற்றும் மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் என்ற தகவல் தெரிய வந்தது.
தேவேந்திரனின் 2-வது மகளும், கடத்தப்பட்ட 17 வயது சிறுமியும் தோழிகள். இதனால் 17 வயது சிறுமி அடிக்கடி தேவேந்திரன் வீட்டிற்கு சென்ற போது சிறுமியிடம் அவர் நட்பாக பேசி வந்தார்.
சம்பவத்தன்று தேவேந்திரன் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, கோவை வந்து சிறுமியை அழைத்து கொண்டு கேரள மாநிலம் கண்ணூருக்கு சென்றார். அங்கு தனது நண்பர் வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். தேவேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.