டெல்லியைக் கலக்கி விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி வந்துள்ள அவர் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இன்று டெல்லி அரசுப் பள்ளிக்கு சுற்றுப்பயணம் செய்து தலைநகரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வந்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் வழங்கினார்.
இதையடுத்து இன்று டெல்லியில் டெல்லி அரசு நடத்தி வரும் பள்ளிக்கூடத்திற்கு அவர் விஜயம் செய்தார். மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா கன்யா வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்திற்கு அவர் வருகை தந்தார். முதல்வர் வருகையையொட்டி அந்தப் பள்ளிக்கூடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
தமிழில் பேனர்
இந்தி பேசும் டெல்லியில், தமிழ்நாடு முதல்வரை வரவேற்று தமிழிலேயே பேனர் வைத்து அசத்தியிருந்தது டெல்லி அரசு. தில்லி அரசுப் பள்ளிகளைப் பார்வையிட வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே வருக வருக என்று அந்த பேனரில் இடம் பெற்றிருந்தது. பார்க்கவே படு ஜோராக இருந்தது அந்த பேனர்.
பள்ளிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால்
மற்றும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். பள்ளிக்கு வந்த ஸ்டாலின் பின்னர் வகுப்பறைகளுக்கு சென்றார். அங்கு ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அங்கு பாடம் கற்பிக்கப்படும் விதம் குறித்து கேட்டறிந்தார். பள்ளியில் என்னெல்லாம் வசதிகள் உள்ளன என்பதை கேட்டறிந்து கொண்டார்.
அடுத்து டெல்லி அரசு சார்பில் நடத்தப்படும் மொஹல்லா கிளினிக்குகளுக்குச் சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கு டாக்டர்களுடன் கலந்துரையாடினார். கிளினிக்கில் உள்ள வசதிகள் உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்தார்.
விசில் அடித்து அசத்தல்
அடுத்து டெல்லி அரசு பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின். விசில் ஊதி போட்டியை அவர் தொடங்கி வைத்தார்.
ஸ்டாலினின் டெல்லி வருகை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் எங்களது பள்ளிகளையும், மொஹல்லா கிளினிக்குகளையும் பார்க்க வருகை தந்துள்ளார். இது எங்களுக்குக் கிடைத்த கெளரவம் ஆகும் என்றார் கெஜ்ரிவால்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாடு எப்போதுமே கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் தரும் மாநிலமாகும். அங்கு மாடர்ன் பள்ளிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. டெல்லி முதல்வர் அந்த தொடக்க விழாவுக்கு நிச்சயம் வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், என் சார்பிலும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று கூறினார் ஸ்டாலின்.
கெஜ்ரிவால் உற்சாகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் வருகை குறித்து நேற்றே அவர் டிவீட் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இன்றும் ஸ்டாலினுடன் அவர் பள்ளிக்கும், கிளினிக்குக்கும் வருகை தந்தபோது பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆர்வத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் ஸ்டாலினுக்கு விளக்கிக் கூறினார்.
டெல்லியில் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. அகில இந்திய அளவில் இது பேசு பொருளாகியுள்ளது. பல மாநிலங்களிலும் டெல்லி மாடலை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் இங்கு வருகை தந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடுத்த செய்திசீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை