சென்னை: தமிழ்நாட்டில் 389 நடமாடும் மருத்துவ வாகன சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை (2-ம் தேதி) தமிழகம் முழுவதும் 27-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்க உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 50 லட்சம் பேரும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1.30 கோடி பேரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், கிராமப்புறங்களில் வீடுகளுக்கு நேரடியாக மருத்துவர்கள் சென்று மருத்துவசேவை அளிப்பதற்காக 389 நடமாடும்மருத்துவ வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவக் களப் பணியாளர் இருப்பார்கள். அத்துடன் தற்காலிக கூடாரம் அமைத்து, மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அடுத்த வாரம் தொடங்கிவைப்பார். ஒவ்வொரு வாகனமும் மாதத்துக்கு 40 முகாம்கள் நடத்த வேண்டும். ரூ.70 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும், குறிப்பாக மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் பயன்பெறும் என்றும் கூறினார்.