வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்களுக்கு 4 மில்லியன் ரூபிள்(ரஷ்ய பணமதிப்பு) அபராதம் விதிக்கப்படும் என, தகவல் களஞ்சியமாக விளங்கும் ‘விக்கிபீடியா’ இணையதளத்திற்கு ரஷ்யா தொலைதொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக இணையதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்தவர்களை குறிவைத்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து பதிவு செய்யப்பட்ட தவறான தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் என விக்கிபீடியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய தொலைதொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம், 4 மில்லியன் ரூபிள் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
முன்னதாக, இதுபோன்று தொடர்ந்து தவறு செய்தால் 8 மில்லியன் ரூபிள்( 91,533 அமெரிக்க டாலர்) அல்லது நிறுவனத்தின் வருமானத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா எச்சரித்திருந்தது. அந்த நிறுவனத்தின் சமூக வலைதளம் மூலம் ரஷ்யா குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டியது. உக்ரைன் மீது தாக்குதல் துவங்கிய நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் சமூக வலைதளங்களுக்கு ரஷ்யா கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement